பிரபல பிரிட்டிஷ்- அமெரிக்க எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் இந்தியாவில் உள்ள மும்பையில் பிறந்தவர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய ஹாடி மாதர் என்பவர் சல்மான் ருஷ்டியை சரமாரியாக 12 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் நடைபெற்ற சிகிச்சையால் மெல்ல குணமடைந்தார். அந்தத் தாக்குதலில் ருஷ்டியின் வலது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. அவரது ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

இதனை அடுத்து குற்றவாளியான ஹாடி மாதரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, 1988 ஆம் ஆண்டு ருஷ்டி வெளியிட்ட “தி சாத்தானிக் வெர்ஸ்” என்ற நாவல் இஸ்லாமிய மதவாதிகளிடையே பெரும் எதிர்ப்பை பெற்றது.

இதனால் அவர் பல கொலை மிரட்டல்களை சந்தித்தார். அதுதான் இந்த கொலை தாக்குதலுக்கும் காரணம் என கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கில் குற்றவாளியான ஹாடி மாதருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.