உ.பி. மாநிலம் மீரட்டில் உள்ள பல்லவ்புரம் பாகம் 2–இல் அமைந்துள்ள எஸ்–பாக்கெட்டில் மே 7ஆம் தேதி மாலை, தடை செய்யப்பட்ட நாயின் இனத்தை வீட்டின் வெளியே அழைத்துசென்றதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

சம்பவம் நிகழ்ந்த அதே வீதியில் வசிக்கும் டொலிகா மிஷ்ரா மற்றும் அவரது மகள், ஆகியோர் பக்கத்து  வீட்டில் வசிக்கும் ஆர்த்தி கடான் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதத்தின் போது, டொலிகாவின் மகன் வேதாந்த் மிஷ்ரா மற்றும் அவரது நண்பர்கள் ஆத்திரத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வீடியோவில், டொலிகா ஆர்த்தியை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கும் காட்சிகள் தெளிவாகக் காணப்படுகின்றன. பின்னர், ஆர்த்தியின் கணவர் வைத்தியர் வைத்தவ் ராணா தாக்கப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இது பற்றி மே 8ஆம் தேதி, ஆர்த்தி கடான் போலீசில் புகார் அளித்தார். அதில், தடைசெய்யப்பட்ட நாய் இனத்தை வீட்டு வாசலுக்கு வெளியே அழைத்துசெல்லும் செயலுக்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததற்காக, டொலிகா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களைத் தாக்கியதாகவும், இரும்புக் கம்பியால் தனது கணவர் வைத்தவ் ராணா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார். அந்த புகாரின்படி எட்டு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீசார், வீதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காணொளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.