
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கை விசாரித்தனர். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (25), அருண்குமார், அருளானந்தம் (34), பாபு (27), ஹெரன்பால் (29), மணிவண்ணன் (28), வசந்தகுமார் (27), சதீஷ் (28), சபரி ராஜன் (25) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு தாமதமாகவே ஹை கோர்ட் உத்தரவின் பெயரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பின்னர் தனி அறை ஏற்படுத்தப்பட்டு குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் அறை கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக சாட்சியங்கள் பெறப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி நந்தினி தேவி மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதில் நீதிபதி நந்தினி தேவியும் ஒருவர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை அந்த நீதிமன்றத்தில் பணியாற்றுவார் என்று கூறப்பட்டதால் கோவை நீதிமன்றத்தில்தான் நந்தினி தேவி பணியாற்றுகிறார். இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கும் நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி, இந்த பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதோடு பாதிக்கப்பட்ட பெண்களும் சிபிஐ அதிகாரிகளிடம் உண்மையைத் துணிச்சலாக கூறினர். அரசு தரப்பில் 48 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய நிலையில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை. இதன் காரணமாக குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டு அனைவரும் குற்றவாளிகள் என்பது நிரூபனமானது.
இதைத்தொடர்ந்து இன்று நண்பகல் 12 மணிக்கு தண்டனை விபரங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதிக்ப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.