இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 9230 ரன்கள் குவித்துள்ளார். இவர் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள நிலையில் இதில் 40 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா சமீபத்தில் ஓய்வு அறிவித்த நிலையில் அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில் விராட் கோலியின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிலர் கூறும் நிலையில் தற்போது நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா ஒரு பதிவை போட்டுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல் குறித்து அனைவரும் பேசும் நிலையில் வெளியே தெரியாத உங்களுடைய கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், நீங்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள காதல் போன்றவற்றை நான்தான் அறிவேன். அது எப்போதும் என் நினைவில் இருக்கும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு பிறகும் நீங்கள் புத்திசாலித்தனமாகவும் கொஞ்சம் பணிவாகவும் திரும்பி வந்த போது அதை பார்ப்பது என்னுடைய பாக்கியமாக இருந்தது.

நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து எப்படியும் ஓய்வு பெறுவீர்கள் என்று நான் கற்பனை செய்த நிலையில் நீங்கள் எப்போதும் உங்கள் இதயத்தை மட்டுமே பின்பற்றினீர்கள். அதனால்தான் என்னுடைய அன்பை கூற விளைகிறேன். மேலும் இந்த ஓய்வின் மூலம் நீங்கள் ஒவ்வொரு துளி மதிப்பையும் சம்பாதித்து விட்டீர்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.