ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், வேகப்பந்து வீரர் ஜோஃப்ரா ஆச்சர் அபார பந்துவீச்சால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தார். போட்டியின் தொடக்க ஓவரிலேயே களமிறங்கிய ஆர்ச்சர், முதல் பந்தில் பஞ்சாப் வீரர் பிரியாஞ்ஷ் ஆர்யாவை வெளியேற்றினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், இரு பவுண்டரிகளை பதித்தார்.

 

ஆனால், அதைத் தொடர்ந்து ஆர்ச்சர் ஓர் பயங்கர பவுன்ஸரால் ஷ்ரேயாஸை பின்னோக்கி தள்ளினார். இறுதி பந்தில், ஷ்ரேயாஸ் கவர் பகுதியில் சிக்சர் அடிக்க முயன்றபோது, ஆர்ச்சர் வீசிய 148 கி.மீ வேகமுள்ள டெலிவரியில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்த அபார பந்துவீச்சு  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“இதுதான் ரியல் வேகம்னு சொல்வாங்க!” என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். பஞ்சாப் அணியின் தொடக்கத்தையே குலைத்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் இந்த ஓவர், ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கான பாதையை திறந்தது. இவரது பந்துவீச்சு இந்த சீசனில் வேறலெவலுக்கு சென்றுவிட்டது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் பேட்டிங் நடைபெறும் போது தூங்கிக் கொண்டிருந்த ஆர்ச்சர் அப்போதுதான் எழுந்து வந்து பௌலிங் செய்தார். ஆனால் அவர் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் வரை வீழ்த்தியது மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் இந்த சீசனில் பஞ்சாப் சொந்த மண்ணில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.