கேரளாவில் திபு திலீப் என்று 35 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காசர்கோடு வெள்ளரிக்கூண்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்த நகை பணம் போன்றவற்றை திருடிவிட்டு அவர் வேறு ஒரு பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த பெண்ணையும் ஏமாற்றிவிட்டு மீண்டும் கேரளா வந்தார். அங்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்தார்.

அவர் மீதான மோகம் போனவுடன் மீண்டும் திருமணத்திற்கு தயாரானார் திலீப். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விவாகரத்து ஆன ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் திலீப்பின் நடத்தை மீது அவருடைய நான்காவது மனைவிக்கு சந்தேகம் வந்ததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார். அவரை தற்போது கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்