
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கொலை வழக்கு குறித்து தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வு முன் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் தமிழக அரசிற்கு விளக்கம் கேட்டு கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
இதில் அவர்கள் கூறியதாவது, நீதிமன்ற வளாகத்தில் கொலை சம்பவம் நடைபெறும் போது காவல்துறையினர் ஏன் தடுக்கவில்லை? என கேட்டனர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கொலை செய்யப்பட்டவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்த நிலையில் விரோதத்தின் காரணமாக கொலை நிகழ்ந்துள்ளது. இந்த கொலை நீதிமன்றத்தின் வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நடந்துள்ளது. கொலை நடந்த இடத்திலேயே காவலாளிகள் விரட்டிச் சென்று கொலை குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் குற்றம் நடப்பதற்கு முன்பாகவே தடுக்க வேண்டும்.
பாதுகாப்பு பணியில் மாவட்ட நீதிமன்றங்களில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினர். இதற்கு தலைமை வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன் பதிலளித்துள்ளார் மாவட்ட நீதிமன்றங்களில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இதனை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருநெல்வேலி சம்பவம் தொடர்பாகவும் மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இது குறித்த விசாரணையை மறுநாள் ஒத்தி வைத்தனர்.