திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கரை எடுத்து லட்சுமி நகர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அகிலாண்டேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சிலம்பரசன் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் அகிலாண்டேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகிலேயே சிலம்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் அலறி சத்தம் போட்டுக் கொண்டே வெளியே ஓடி வந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களாகவே சிலம்பரசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலம்பரசன் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் சிலம்பரசன் தனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.