மத்திய அரசு ரேஷன் கார்டு பயனாளர்களின் கேஒய்சி செயல்முறையை எளிதாக்கி உள்ளது. இப்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுக்கருகில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் கேஒய்சி அப்டேட்டை முடிக்க முடியும். இதனால் பயனாளிகள் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய சிரமம் குறையும்.

இந்த புதிய நடைமுறை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். முன்னதாக அவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்புக்காக தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும். ஆனால் இப்போது அருகிலுள்ள கடையில் இ-கேஒய்சி சரிபார்ப்பை இலவசமாக செய்து கொள்ளலாம்.

கேஒய்சி சரிபார்ப்பை எளிமைப்படுத்துவதற்காக ரேஷன் கார்டு தொடர்பான தகவல்களை புதுப்பிக்க ரேஷன் கடை விற்பனையாளர்கள் உதவி வருகின்றனர். இதற்கான சரிபார்ப்பு முறையில் கைரேகை மற்றும் கண் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வசதி பயனாளர்களுக்கு முழுமையாக இலவசமாகக் கிடைக்கின்றது. ரேஷன் கார்டில் இருக்கும் மொபைல் எண்ணை மாற்றுதல், உறவு முறைகளை திருத்துதல் போன்ற அப்டேட்களை தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் செய்துகொள்ளலாம்.

இந்த செயல்முறையை உடனே முடிக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. இல்லையெனில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கிறது.