அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரையுலகின் உயரிய விருதான 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக முழுவதும் உள்ள பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆஸ்கார் விழாவினை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்றவர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். அதன்படி சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருது கில்லர்மோ டெல் டோராவின் பினோக்கியோ திரைப்படம் வென்றது. ‌

அதன் பிறகு Everything Everywhere All at Once திரைப்படம் சிறந்த துணை நடிகர் (கி ஹு ஹுவான்), சிறந்த துணை நடிகை (ஜேமி லீ கர்டிஸ்), சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (மிஷெல் யோ), சிறந்த இயக்குனர் (டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெரட்), சிறந்த படத்தொகுப்பு (பால் ரோஜர்ஸ்), சிறந்த திரைக்கதை ஆகிய 7 விருதுகளை பெற்றுள்ளது. ஒரே திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை வென்றது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதனையடுத்து சிறந்த ஆவணப்படம் பிரிவில் நவால்னி ஆஸ்கார் விருதினை வென்றது. சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்திற்கான விருதை The Whale திரைப்படம் வென்றது. சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers ஆஸ்கார் விருதினை வென்றது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதினை Black Panther: Wakanda Forever படத்திற்காக ரூத் கார்டர் வென்றார். சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை All Quiet on the Western Front படம் வென்றது. சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருது All Quiet on the Western Front படத்திற்காக வோல்கர் பெர்டில்மேனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த Visual Effects பிரிவில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.

சிறந்த பாடல் பிரிவில் இந்திய படமான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பெற்றது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் விருதினை வென்ற The Elephant Whisperers படக்குழு மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு இந்திய பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை The Whale படத்திற்காக பிரின்டன் ஃபரேஸர் வென்றார். மேலும் சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதினை Top Gun: Maverick திரைப்படம் வென்றுள்ளது.