‘கே.எல்.ராகுல் பேட்டிங்கைப் பார்ப்பது மிகவும் சலிப்பாக இருக்கிறது என கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்..

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுலுக்கு எதிராக கேலி செய்துள்ளார். பவர்பிளேயில் ராகுலால் வேகமாக ரன்களை எடுக்க முடியவில்லை. முதல் ஆறு ஓவர்களில் ராகுலின் மெதுவான வேகத்தை விமர்சித்த அவர், பவர்பிளேயில் ராகுலின் பேட்டிங்கைப் பார்ப்பது மிகவும் சலிப்பான விஷயம் என்று கிண்டல் செய்தார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தலைமையிலான வலுவான பந்துவீச்சை எதிர்த்து ராகுல் ரன் எடுக்கத் தவறினார். இதையடுத்து பீட்டர்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பீட்டர்சன் ராகுலின் ஷாட் தேர்வு மற்றும் சராசரிக்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டை விமர்சித்தார். ஐபிஎல் வர்ணனையின் போது இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

டிரென்ட் போல்ட்டின் முதல் 6 பந்துகளில் ராகுலால் தனது அக்கவுண்டை ஓபன் (1 ரன் கூட எடுக்கவில்லை) செய்ய முடியவில்லை. பவர்பிளேயில் ராகுல் 19 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது பீட்டர்சனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கேஎல் ராகுல் ராஜஸ்தானுக்கு எதிராக 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

டாஸ் இழந்து முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. கைல் மேயர்ஸ் 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது..