அதிக சிக்ஸர்கள் அடித்து சனத் ஜெயசூர்யாவை வீழ்த்தி ரோகித் சர்மா 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்..

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்றுநடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோஹித் (101) மற்றும் சுப்மன் கில் (112) இருவரின் அதிரடி சதத்தால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 385 ரன்கள் குவித்தது. பின் ஆடிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரர் டேவான் கான்வே (138) – நிக்கோல்ஸ் (42) ஜோடி மட்டுமே சிறப்பாக ஆடியது. இவர்கள் இருவரும் அவுட் ஆனதை தொடர்ந்து மிடில் ஆர்டரும் சரிந்தது.

மேலும் சான்ட்னர் 34 ரன்களும், பிரேஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற படி யாரும் பெரிதாக ரன்கள் சேர்க்காமல் விக்கெட்டை இழக்க 41.2 ஓவரில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. இதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 3: 0 என கைப்பற்றி அசத்தியது மட்டுமில்லாமல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது..

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஜோடி ஆபத்தான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா சிறப்பான ரிதம் மற்றும் வலுவான ஷாட்களை ஆடினார். இந்த இன்னிங்ஸில் ரோஹித் 85 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.. அதில், 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இதில் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சனத் ஜெயூர்யாவை பின்தள்ளியுள்ளார்.

இந்தப் போட்டிக்கு முன்பு 267 சிக்ஸர்களுடன் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 4 வது இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது 273 சிக்ஸர்களுடன் 3வது இடத்தை அடைந்துள்ளார். இதன் மூலம் 270 சிக்ஸர்கள் அடித்த இலங்கையின் ஜெயசூர்யாவை ரோஹித் ஷர்மா பின்னுக்குத் தள்ளிவிட்டார். இதன் மூலம் 270 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் வாழ்க்கையில் அதிக சிக்ஸர்களை அடித்ததைப் பற்றி நாம் பேசினால், இந்த சாதனை முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைமை தேர்வாளருமான ஷாஹித் அப்ரிடியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 351 சிக்சர்களை அடித்துள்ளார். அவர் 398 போட்டிகளில் 369 இன்னிங்ஸ்களில் இந்த சிக்ஸர்களை அடித்தார். இந்தப் பட்டியலில் மேற்கிந்திய ஜாம்பவான் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கெய்ல் 331 சிக்சர்களை அடித்துள்ளார். இந்திய வீரர் தோனி 229 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.