நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார். அதன்பிறகு மூவர்ண நிறத்திலான பலுன்களை வானில் பறக்க விட்டார். அதன் பிறகு காவல்துறையினர், தேசிய மாணவர் படை, சாரணியரின் அணிவகுப்பு மரியாதை போன்றவற்றை மேயர் பிரியா ராஜன் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்ணுக்கு காட்சி அறிவுக்கு மீட்சி என்ற தலைப்பில் கலை நயமிக்க கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை காண்பித்ததோடு ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய படைப்புகள் குறித்து விளக்கமும் கொடுத்தனர். அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவரான இஷான்‌ மிலன் ஜெய் என்பவர் வீடுகளில் இருந்து கிடைக்கும் மக்கும் குப்பைகளிலிருந்து உயிரி எரிவாயு தயாரிக்கும் சிறிய ரக அலகை கண்டுபிடித்து இருந்தார். மேலும் இந்த மாணவருக்கு மேயர்‌ பிரியா ராஜன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.