மகாராஷ்டிராவின் சில்லோட் நகரில் உள்ள மோகல்புரா பகுதியில் 4 வயது ஆயாத் ஃபஹீம் ஷெய்க் என்ற சிறுமி கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது சில்லோட்டில் வசித்த ஃபாஉஸியா ஃபஹீம் ஷெய்க் (27) மற்றும் ஷெய்க் ஃபஹீம் (35) என்ற தம்பதியினர், தங்களுக்கு ஏற்கனவே நான்கு ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு பெண் குழந்தை வேண்டும் என்பதால் ஜல்னா பகுதியை சேர்ந்த ஷெய்க் நசீம் அப்துல் கய்யூம் என்பவரிடமிருந்து ரூ.5,000 கொடுத்து ஆயாத் என்ற சிறுமியை ஆவணத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளனர்.

ஆனால், ஃபாஉஸியா குழந்தையை விரும்பவில்லை என்பதால் அந்த குழந்தையை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதோடு சூடு வைத்தும் டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை 3 மணியளவில் கடுமையாக காயமடைந்த நிலையில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை ஏற்கனவே  இறந்துவிட்டதாக கூறினர்.  இதனால் தம்பதி குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால், ஒரு அறியப்படாத நபர் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, உடலை அடக்கம் செய்யும் முன் போலீசார் தடை செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடலில் பல இடங்களில் தாக்குதலுக்கான காயங்கள் இருப்பதும், கை கால்கள் முறிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஃபாஉஸியா குழந்தையை அடித்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக தம்பதியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.