
ஜப்பானின் பசிபிக் கடற்கரை அருகே எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி, கட்டிட இடிவீழ்ச்சி உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு சுமார் 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என ஜப்பான் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாதியாகிய 270.3 டிரில்லியன் யென் (1.81 டிரில்லியன் டாலர்) அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும்.
நன்காய் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியில், மெக்னிட்யூட் 8 முதல் 9 வரையிலான நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு ஜப்பானின் தென்-கிழக்கு பசிபிக் கடற்கரையை ஒட்டிய பகுதியைச் சூழ்ந்துள்ளது. இங்கு பிலிப்பைன் கடல் பிளேட், யூரேஷிய பிளேட்டின் கீழ் செல்லும் நில அமைப்பே இத்தகைய அழுத்தங்களை உருவாக்கி வருகிறது.
மிக மோசமான சூழ்நிலையில், இது குளிர்கால இரவில் நடைபெறுமானால், சுமார் 12.3 லட்சம் பேர் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும். 2011ல் ஏற்பட்ட மெக்னிட்யூட் 9 நிலநடுக்கம் 15,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்பதை தொடர்ந்து, அரசு கடந்த ஆண்டு முதல் இத்தகைய மெகா நிலநடுக்கங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.