24 மணி நேரமும் டீக்கடை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் காபி-டீக்கடைகள் வர்த்தகர் சங்கத்தின் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரையில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் சந்திர குழந்தை திருமண மகாலில் இந்த ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு சங்க பொருளாளர் சுப்ரமணியன் வரவேற்க விழாவை சங்கத் தலைவர் முத்துமாணிக்கம் துவங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து முன்னாள் செயலாளர் பாலச்சந்திரன் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ பூமிநாதன், மேயர் இந்திராணி பொன் வசந்த் மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.

அப்போது விழாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை 4 சித்திரை வீதி, மாசி வீதி, வெள்ளிவீதிகளில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காபி டீக்கடைகளில் உபயோகிக்கும் கமர்சியல் கேஸ் சிலிண்டர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தூங்கா நகரமான மதுரையில் 24 மணி நேரமும் காபி, டீக்கடைகள் செயல்படுவதற்கு தமிழக அரசும் காவல்துறையும் அனுமதிக்குமாறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.