முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலுக்கு செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தார்.

ஆனால் இப்போது மாணவர்களுக்கு லேப்டாப் தரப்படவில்லை. இதற்கான நியாயமான காரணத்தை முதல்வரால் சொல்ல முடியுமா.? தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முதல்வர் என்ன குறையை கண்டுபிடித்தார் என்று அதனை நிறுத்தினார். அதிமுக ஆட்சிக்காலத்தின் போது 47 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 17 லட்சம் பேருக்கு தான் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் அனைவருக்கும் கொடுப்போம் என்று கூறிவிட்டு தற்போது ஒரு கோடியே 4 லட்சம் பெண்களுக்கு மட்டும் தான் கொடுக்கிறார்கள்.

நாங்கள் தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் 1500 ரூபாய் தருகிறோம் என்று கூறினோம். அதோடு 6 சிலிண்டர்கள் வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தோம். இந்நிலையில் தேர்தல் வரும்போது திமுக ஓட்டுக்கு பணம் கொண்டு வருவார்கள். அது உங்களுடைய பணம் தான் எனவே அதனை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை மட்டும் இரட்டை இலை சின்னத்திற்கு போடுங்கள். நீங்கள் அதிமுகவுக்கு வாக்களித்தால் மாதம் ஆயிரம், 2500 ரூபாய் என 5000 ரூபாய் கூட நாங்கள் கொடுப்போம். மேலும் அதிமுகவை நம்பி நீங்கள் ஓட்டு போடலாம் என்று கூறினார்.