2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதி சுற்றில் ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டின் முதல் காலிறுதி போட்டியில் இன்று இந்தியா – நேபாள அணிகள் இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு மோதியது. இதில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது காலிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இந்திய நிரப்படி 11:30 மணியளவில் மோதியது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது, ஆனால் 9-வது வீரர் பாகிஸ்தானை 16 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.

சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது, மிர்சா பாக் (0) ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்கும் வகையில் இங்கிருந்து விக்கெட்டுகளின் தொடர் தொடங்கியது, 13வது ஓவரில் பாகிஸ்தான் அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

அங்கிருந்து ஆசிப் அலி, அராபத் மின்ஹாஸ், அமீர் ஜமால் ஆகியோர் பொறுப்பேற்றனர். ஆசிப் மற்றும் அராபத் தலா 25 ரன்கள் எடுத்தனர்.. அமீர் ஜமால் 16 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அமீரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங்கின் தொடக்கமும் மோசமானது. ஹாங்காங் 10 ரன்னில் இருந்தபோது தொடக்க வீரர் முகமது கான் (0) பெவிலியன் திரும்பினார். நிசாகத் கான் (11), பாபர் ஹயாத் (29) ஆகியோர் சிறிது நேரம் இன்னிங்ஸை நிலைநிறுத்தினார்கள், அதன்பின் வந்த வீரர்கள் ஷிவ் மாத்தூர் (10), அக்பர் கான் (6), முகமது கசன்பர் (2,) நியாஸ் அலி (12) என அடுத்தடுத்து அவுட் ஆனவுடன், ஒட்டு மொத்த அணியும் சீட்டுகட்டு போல் சரிந்தது. மேலும் அணியில் இருந்து 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். இஷான் கான் 15 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். மொத்த அணியும் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் குஷ்தீல் ஷா 3 விக்கெட்டுகளும், காசிம் அக்ரம், அராபத் மின்ஹாஸ், சுபியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதலாம் :

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு வந்துவிட்டது. நேபாளத்தை வீழ்த்தி இந்தியா நாக் அவுட் சுற்றுக்கான டிக்கெட்டை பதிவு செய்தது. இப்போது 4வது காலிறுதியில் வெற்றி பெறும் அணியை இந்தியா சந்திக்கும். அதே சமயம் 3வது காலிறுதியில் வெற்றி பெறும் அணியை பாகிஸ்தான் சந்திக்கும். இவ்விரு அணிகளும் தத்தமது அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்றால், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும்.

மீதமுள்ள காலிறுதியில் எந்த அணி யாருடன் மோதும்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றுள்ளது. மேலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்றாவது கால் இறுதியில் நாளை (அக்டோபர் 4) காலை 6:30 மணிக்கு மோதுகிறது. நான்காவது காலிறுதியில் வங்கதேசம் மற்றும் மலேசியா அணிகள் நாளை (அக்டோபர் 4) காலை 11:30 மணிக்கு)  ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் அக்டோபர் 6-ம் தேதி அரையிறுதிக்கு முன்னேறும். அதன்பிறகு, அக்டோபர் 7ஆம் தேதி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டி நடைபெறுகிறது.