மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அம்மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தற்கொலை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
ராம்பூர்ஹட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்தான் இந்தச் சோகம் அரங்கேறியுள்ளது. ராம்பூர்ஹட் தொகுதியின் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர் ஆஷிஷ் பானர்ஜி. மேலும் இவர், பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும், கடந்த சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பொறுப்பு வகித்தவர். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியிருந்தார்.
உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் தகவல்படி, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிய ஆஷிஷ் பானர்ஜி, அன்றைய தினம் முழுவதும் கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருந்துள்ளார். வழக்கம்போல் நள்ளிரவு வரை தனது தம்பி பிரசாந்த் பானர்ஜி மற்றும் நண்பர்களுடன் சிரித்துப் பேசிவிட்டுத்தான் தூங்கச் சென்றுள்ளார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அலுவலகத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் உறைந்துபோகச் செய்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை வழக்கு என்பது உறுதியாகியுள்ளது. சம்பவ இடத்தில் நாங்கள் கைப்பற்றிய தற்கொலை கடிதத்தில், ‘என் சாவுக்கு யாரும் காரணமல்ல’ என்று அவர் எழுதியுள்ளார்” என்றார். இருப்பினும், அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் சில வரிகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தாராபீத் ராம்பூர்ஹட் வளர்ச்சி ஆணையம் (TRDA) தொடர்பான முறைகேடுகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தன் மீது களங்கம் கற்பிக்கப்பட்டதை நினைத்து வருந்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் வாழ்நாளில் கட்சியின் அனைத்துத் தவறுகளையும் என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அதேசமயம் எதிர்க்கவும் முடியவில்லை. என் வாழ்நாளில் எந்தவொரு பணிக்காகவும் நான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை. என்னை இழிவுபடுத்த முயன்றவர்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அரசியலுக்கு வந்தது ஒரு தவறு என்பதை உணர்ந்துள்ளேன்” என்று தன் குடும்பத்தினருக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஷிஷ் பானர்ஜியின் திடீர் மறைவு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவரைத் தேர்தலில் வீழ்த்திய பாஜக எம்எல்ஏ துருப் சாஹா கூறுகையில், “இது மிகவும் வேதனையான சம்பவம். தேர்தல் முடிவுக்குப் பிறகு நான் அவரது வீட்டிற்குச் சென்று ஆசி பெற்றேன். இதற்கான உண்மையான காரணம் குடும்பப் பிரச்சினையா அல்லது அரசியலா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
