மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கின்றன.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாக குறிப்பிட்டு,  தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் 5060 கோடி வழங்க வேண்டும் என்று  பிரதமருக்கு முதல்வர்  கடிதம் எழுதி இருக்கிறார்.

மிக்ஜாம்  புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், முழு சேத விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்  விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு,  இன்னும் கூடுதலாக நிதி கோரப்படும்  எனவும் தெரிவித்துள்ளார்கள்.

எனவே மத்திய அரசினுடைய குழுவினை அனுப்பி வைக்க முதலமைச்சர் தனது கடிதம் மூலமாக கேட்டுள்ளார். நேற்றைக்கு இந்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பிரைம் மினிஸ்டர் மோடியை பார்த்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.