உலகின் மிக நீளமான நதி என பெயர்ப்பெற்ற நைல் நதியின் குறுக்கே, எகிப்து மற்றும் சூடான் நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, எத்தியோப்பியா கடந்த 15 ஆண்டுகளாக கட்டி வந்த மறுமலர்ச்சி அணை (Grand Ethiopian Renaissance Dam – GERD) திட்டத்தை முழுமையாக முடித்துள்ளது.

நைல் நதிக்கு இரண்டு முக்கிய கிளைகள் உள்ளன – உகாண்டாவிலிருந்து வரும் வெள்ளை நைலும், எத்தியோப்பியாவில் உருவாகும் நீல நைலும். இவை இரண்டும் சூடானின் கர்த்தோம் பகுதியில் இணைந்து, எகிப்து வழியாக கடலில் கலக்கின்றன. இந்த நதி வழியே, எகிப்தின் 10 கோடிக்கு மேற்பட்ட மக்களும் விவசாயமும் தழைத்துவருகின்றன. எனவே, எத்தியோப்பியாவின் அணை திட்டம், நீர் பங்கீடு பாதிக்கக்கூடும் என்ற காரணத்தால், எகிப்தும் சூடானும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த திட்டம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நீண்ட பரிசீலனை, சர்வதேச அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் கடந்து, இப்போது முழுமை பெறப்பட்டுள்ளது. 5,400 அடி நீளம் மற்றும் 525 அடி உயரம் கொண்ட இந்த அணை, 7,400 கோடி கன அடி நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இதன் மூலம், 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இது, எத்தியோப்பியாவின் தற்போதைய மின் உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

வரும் செப்டம்பர் மாதம், இந்த மாபெரும் அணை திட்டம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமத் அலி அறிவித்துள்ளார். மேலும், “எகிப்து மற்றும் சூடான் நாடுகளுக்கான நீர் பங்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இது, ஆப்ரிக்காவில் மிகப் பெரிய நீர்மின் திட்டமாகும் என்றும், எதிர்காலத்தில் மின்சாரம் ஏற்றுமதி செய்யும் நாடாக எத்தியோப்பியா வளரக்கூடும் என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.