முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், கோலிக்கு ஆதரவு அளித்தார்..

ஆரஞ்சு தொப்பி வைத்திருப்பவராகவும், 2024 ஐபிஎல்லின் முதல் சதம் அடித்தவராகவும் இருந்த போதிலும், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 113 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் ஸ்ட்ரைக்-ரேட் விவாதத்தைத் தூண்டியதால் விமர்சனங்களுக்கு ஆளானார்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மோதலில் ஜோஸ் பட்லரின் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனுக்கு சமூக ஊடகங்கள் கருணை காட்டவில்லை. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், கோலிக்கு ஆதரவு அளித்தார்.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபாஃப் டு ப்ளெசிஸ் மற்றும் கோலி ஆகியோர் 125 ரன்களை குவித்து அசத்தினார்கள். ஆனால் மறுமுனையில் இருந்து ஆதரவு இல்லாத நிலையில், கோலி தனது 72 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் எடுத்தார். ஃபாஃப் டு பிளெசிஸ் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்ததைத் தவிர, அந்த அணிக்கு பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இல்லை. விராட் கோலி ஐபிஎல் வாழ்க்கையில் 8வது சதத்தை எட்டினார். அதோடு ஐபிஎல் வரலாற்றில் 67 பந்துகளில் சதமடித்த (மெதுவான சதம்) வீரராக மனீஷ் பாண்டேவுடன் சாதனையை பகிர்ந்து கொண்டார் கோலி.

கோலியின் முயற்சி வீண் போக, பட்லரின் அனல் பறக்கும் சதம் மற்றும் சஞ்சு சாம்சனின் அரைசதத்திற்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டன் அவரது ஸ்ட்ரைக் ரேட்டிற்காக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும், கிளார்க் தோல்விக்கு கோலியைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து, மற்ற வரிசையிலிருந்து நட்சத்திர பேட்டருக்கு ஆதரவு இல்லாததைக் குறை கூறினார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியதாவது, “நான் விராட் கோலியை நோக்கி விரல் நீட்ட மாட்டேன். அவர் புத்திசாலித்தனமாக இருந்தார், மேலும் அவரைச் சுற்றியுள்ள பேட்டர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை, போதுமான நம்பிக்கையுடன் அல்லது போதுமான சுதந்திரத்துடன் விளையாடாததால் அவர் விளையாட வேண்டிய சரியான ரோலை அவர் வகித்தார் என்று நான் நினைக்கிறேன், ”என்று  கூறினார்.

மேலும் “ஆர்சிபி மைதானத்தில் 15 ரன்களை குறைவாக எடுத்தது என்று நினைக்கிறேன். அவர்களின் சில முடிவுகளை புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் பினிஷராக இருக்கும்போது மேக்ஸ்வெல்லுக்குப் பிறகு அவர் ஏன் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நிச்சயமாக கிரீனுக்கு முன் வந்திருக்க வேண்டும். இது ஒரு சுவாரஸ்யமான முடிவு, ஃபார்மில் இல்லாத மற்ற பேட்டர்கள் உள்ளனர், அது அவர்களை காயப்படுத்தக்கூடும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.