மும்பையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின் போது, 29 வயது முன்னணி டிவி நடிகை தனது 30 வயது சக நடிகரால் மதுபோதையில் தொந்தரவு செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது நிறுவனம் அலுவலகத்தின் மேல் மாடியில் ஹோலி கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த நடிகர் மதுபோதையில் அங்கு வந்து, நடிகையிடம் அவதூறாக நடந்துகொண்டதாகவும், அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்காக, மும்பையின் மேற்குப் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில், பாரதீய நயாய சனிதா (BNS) சட்டத்தின் 75(1)(i) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை அலுவலகத்திற்குள் அநாகரிகமாக நடந்து கொண்ட சக நடிகருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். “அவர் ஹோலியில் நிறம் பூசுவதற்காக என்னிடம் அனுமதி கேட்டதில்லை. நான் நிறம் பூச அனுமதிக்க மறுத்தபோதும், அவர் என்னை தொடர்ந்து வந்து, பாணிபூரி கடை அருகில் ஒளிந்தபோதும், என்னை பிடித்து என் முகத்தில் நிறம் பூசினார். மேலும், ‘நான் உன்னை காதலிக்கிறேன், யார் என்னிடமிருந்து காப்பாற்றப் போகிறார்கள் என்று பார்க்கலாம்’ எனக் கூறினார். அதன்பிறகு, என்னை தவறாக தொட முயன்றார், நான் அவரை தள்ளிவிட்டு உடனே கழிவறைக்குச் சென்று அழுதேன்” என நடிகை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நடிகையின் நண்பர்கள், அந்த சக நடிகரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் அவர்களுடனும் மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், நடிகை காவல்துறையை அணுக, அந்த நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறை அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பார்ட்டியில் இருந்த மற்றவர்களிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் சோதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த5 நாள்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.