தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக நடிகை ஆண்ட்ரியாவை வைத்து மனுஷி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகர் விஜயின் கத்தி படம் தன்னுடைய கதை என்று சட்டப் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் சமீபத்திய பேட்டியில் நடிகர்கள் தனக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகைகள் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, என்னை முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. ஹீரோயின்கள் மட்டும்தான் என்னை மதித்து கதை கேட்கிறார்கள். சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு வந்து படம் இயக்க நினைப்பவர்களுக்கு ஹீரோக்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை. இங்கு யாரை வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சினிமா இருக்கிறது. நான் நயன்தாராவிடம் அறம் படத்தின் கதையை கூறியவுடன் ஒரு குழந்தையை மீட்க  எந்த ஒரு தொழில்நுட்பமும் இங்கு இல்லை என்பது புரிந்தவுடன் உடனே அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதேபோன்று மனுஷி படத்தின் கதையைக் கேட்டவுடன் அதிலுள்ள கதை அம்சத்தை புரிந்து கொண்டு ஆண்ட்ரியாவும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறியுள்ளார்.