டெல்லியில் இருந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி பாரத கௌரவ சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியில் இருந்து ஜனக்பூர் வரை செல்லும் நிலையில் இந்த பயணத்துக்கு ஸ்ரீராம் ஜானகி யாத்திரை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் நந்தி கிராமம், சீத்தாமர்கி, காசி, பிரயாக்ராஜ் வழியாக நேபாளம் செல்லும் நிலையில், காசி மற்றும் ஜனக்பூரில் இரவு நேர பயணிகள் ஹோட்டலில் தங்கலாம். இந்த சுற்றுலா ரயிலில் 7 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில் முதலில் அயோத்தியில் ரயில் நிற்கும். அங்கு சுற்றுலா பயணிகள் ராமஜென்ம பூமி கோவில், அனுமான் கோவில் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.

அதன்பிறகு நந்தி கிராமத்தில் பாரத் மந்திருக்கு செல்லலாம். இந்த ரயில் கடைசியாக பிகாரில் உள்ள சீதாமர்கி ரயில் நிலையத்தில் நிற்கும். அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு பீகாரிலிருந்து சுற்றுலா பயணிகள் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்நிலையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சுற்றுலா ரயிலில் 2 உணவகங்கள், ஒரு நவீன கிச்சன், ஷவர்கள், சென்சார் அடிப்படையில் செயல்படும் கழிவறைகள், கால்களுக்கு மசாஜ் செய்யும் இயந்திரங்கள் போன்றவைகள் இருக்கிறது. மேலும் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஒரு சுற்றுலா பயணிடம் ரூ. 39,775 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.