பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடங்கி சில நாட்களிலேயே, கிரிக்கெட் உலகையே உலுக்கும் ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 6-வது போட்டியின் போது, லாகூர் அணியின் நட்சத்திர வீரர் ஃபகார் ஜமான் பந்தை சேதப்படுத்திய (Ball Tampering) அதிர்ச்சி வீடியோ கேமராவில் சிக்கியுள்ளது. கத்தாபி மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் கடைசி ஓவரில், வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது, இந்த தில்லுமுல்லு அரங்கேறியுள்ளது.

​ஹாரிஸ் ரவுஃப் பந்து வீச வருவதற்கு முன்னால், கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஃபகார் ஜமான் அவரிடம் ஏதோ வியூகம் வகுப்பது போல பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அதே சமயம் ஃபகார் ஜமான் பந்தை வேண்டுமென்றே தேய்த்து சேதப்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதை கவனித்த நடுவர்கள் உடனடியாக லாகூர் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி விதித்து அதிரடி காட்டினர்.

இந்த சம்பவம் குறித்து கேட்டதற்கு, “எனக்கு எதுவும் தெரியாது” என ஷாஹீன் அப்ரிடி மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருவதால், சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.