பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்பட்டுள்ள லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த சர்ச்சை முடிவடைவதற்கு முன்பாகவே சமீபத்தில் லட்டுவில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருந்தது தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அது ஒரு போலியான செய்தி என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.‌

இதைத்தொடர்ந்து தற்போது அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது திருப்பதி கோவிலில் அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட ஒரு பக்தரின் தயிர் சாதத்தில் பூரான் கிடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.