
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் முகமது – மைமுனா தம்பதியினர். முகமது தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முகமது மதிய நேர தொழுகையை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்பு தனது மனைவிக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. எனவே இன்று அதிகாலை நேரத்தில் முகமது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த முகமது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மைமுனாவின் முகம் மற்றும் கை, கால்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்ப்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மைமுனாவின் உடலை ஆய்வு செய்த போது அவர் அணிந்திருந்த 6 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.
பின்பு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே மைமுனா கொலை செய்யப்பட்டுள்ளாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது