விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அருகே சிப்காட் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராடியவர் தொடர்பான வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அருகே சிப்காட் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராடிய விவசாயி அருள் ஆறுமுகம் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது மனைவி பூவிழி கீர்த்தனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதி எஸ்.எஸ் சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு தரப்பில் விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் திட்ட விவரங்கள், கருத்து கேற்பு கூட்டம் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

அந்த உத்தரவில் எந்த ஒரு தீவிர குற்றத்திலும் ஈடுபடாத நிலையில், அதற்கான முகாந்திரம் இல்லாத நிலையிலும்  மக்களை போராட்டத்திற்கு தூண்டினார், நிலம் கொடுக்க முயன்றவர்களை தடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைதியான முறையில் 3 மாதங்களுக்கு மேலான போராட்டம் நடத்திய நிலையில், உள்நோக்கத்துடன் இந்த குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்கு தெரிவதாகவும், அதன் அடிப்படையில் இந்த போராட்டம், அதே சமயம்  நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பான அணைத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதனை ஆராய்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்கிறோம் என கூறி வழக்கின் விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு நீதிபதிகள்  தள்ளி வைத்துள்ளனர்..