
9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. சமீப காலமாகவே ஃபார்மின்றி தவித்து வந்த நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த தொடரில் ஆவது மீண்டும் ஒரு ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 38 பந்துகளை எதிர் கொண்ட அவர் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மீண்டும் ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இப்படியான நிலையில் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விராட் கோலிக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். அதில், விராட் கோலி போல நானும் தடுமாற்றமான காலங்களில் இருந்துள்ளேன். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி இவ்வளவு காலம் தடுமாற்றமாக விளையாடியது கிடையாது. தற்போது அவர் அதிகமாக முயற்சிப்பதாக நான் உணர்கின்றேன். வெற்றியை நீங்கள் பறிக்கக் கூடிய வீரர் என அனைவரும் சொல்கிறார்கள். விராட் கோலி நம்முடைய அணியின் முக்கியமான வீரர்.
இது போன்ற அழுத்தம் இருக்கும்போது அதை பூர்த்தி செய்வதற்காக திடீரென்று நீங்கள் அனைத்து முக்கியத்துவத்தையும் விட்டுவிட்டு கடினமாக முயற்சிக்க செய்வீர்கள். கொஞ்சம் அதிகமாக கடினமாக முயற்சிக்கிறார் என்பது அவர் விளையாடிய விதத்தில் பார்க்க முடிந்தது. ரோகித் சர்மா இங்கே வந்து சுதந்திரமாக விளையாடுகின்றார். விராட் கோலி எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும். அவர் கொஞ்சம் தமக்குத்தாமே அழுத்தம் கொடுப்பதாக நினைக்கின்றேன். தடை செய்யாமல் களத்திற்குச் சென்று முடிவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரத்துடன் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.