விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஆதவ் அர்ஜுனா நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று அதிமுக கட்சியின் நிர்வாகி நிர்மல் குமாரும் நேற்று  தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளார். அவருக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பு வழங்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆதவர் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை நேரில் சென்று சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற ஆதவ்  அங்கு திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விசிக கட்சியில் இருந்து ஆதவ்  விலகிய போது அதனை ஒரு பகையாக நாங்கள் எண்ணவில்லை. கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் என்பது ஏற்பட்டாலும் களத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று செயல்பட்டாலும் இத்தகைய நட்புறவை பேணுவது என்பது அரசியலில் ஒரு நாகரிகமான செயல்முறை. எங்கள் சந்திப்பில் எந்த விதமான அரசியல் அணுகுமுறையும் கிடையாது.

வேறு கட்சியில் இணைந்ததால் ஒரு மரியாதை நிமித்தமாக ஆதவ் என்னை சந்தித்தார். அவர் என்னிடம் பெரியாரின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்று கூறினார். ஆதவ் அர்ஜுனாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது இருப்பினும் அவர் விஜயுடன் இணைந்து இணைப்பது மகிழ்ச்சி தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் கட்சியில் பொறுப்பு வாங்கிய அடுத்த சில மணி நேரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை ஆதவ் நேரில் சென்று சந்தித்த நிலையில் விஜய் திருமாவளவனை கூட்டணிக்கு நேரடியாகவே அழைத்த நிலையில் ஒருவேளை அது சம்பந்தமாக கூட ஆதவ் நேரில் சென்று திருமாவளவனை சந்தித்திருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.