தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையில் ஐஜேகே, பாமக, தமமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவையும் களம் காண்கின்றன.

இந்நிலையில் அதிமுக இரண்டாம் கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு & புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக – திமுக 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிக, சிபிஎம் & சிபிஐ ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 2 தொகுதிகளிலும், அதிமுக – காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், முஸ்லீம் லீக், மதிமுக & கொமதேக ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 1 தொகுதிகளிலும் நேரடியாக மோதவுள்ளது.