
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆண் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜலேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில், விசாரணை அதிகாரி, வழக்கை ஒழுங்காக விசாரிக்காமல், வெறும் 6 சமோசா வாங்கியதற்குப் பிறகு வழக்கை முடித்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, அந்த சிறுமி பள்ளிக்குச் சென்ற பிறகு மதியம் 1 மணிக்கு வீடு திரும்பும்போது, கிராமத்தைச் சேர்ந்த வீரேஷ் என்ற நபர் அவளைக் கட்டாயமாக கோதுமை வயலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர், அருகில் இருந்த இருவர் அந்த இடத்திற்கு வந்தபோது, சாதி அடிப்படையில் அவமதித்து, கொலை மிரட்டல் விடுத்து வீரேஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை புகார் கொடுத்த நிலையில் விசாரணை அதிகாரி சமோசா லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்துவிட்டார். அதாவது குற்றவாளி சமோசா கடை வைத்திருந்ததால் அவரிடம் இருந்து வெறும் ஆறு சமோசா கடை பெற்றுக்கொண்டு விசாரணை அதிகாரி அந்த வழக்கை முடித்து வைத்துவிட்டார். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, 2025 ஜூன் 27 அன்று நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சிகள், குழந்தையின் நேரடி வாக்குமூலம் உள்ளிட்டவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அதிகாரி மிக மோசமான முறையில் விசாரணை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணை அறிக்கையிலும் உண்மையை மறைக்கும் வகையில் போலியான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் மேற்பரிசீலனையில், POCSO சட்ட சிறப்பு நீதிபதி நரேந்திர பால் ராணா அவர்கள், காவல்துறையின் FIR அறிக்கையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் முற்றிலும் புதியதாய் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு, நீதிக்காக போராடும் சிறுமியின் குடும்பத்திற்கு நம்பிக்கையை மீட்டுத்தந்ததோடு, காவல்துறையின் விசாரணை முறைகள் மீதும் சீரிய கேள்வி எழுப்புகிறது.
இப்போதைய நிலவரத்தில், வழக்கு மீண்டும் விசாரணைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு நீதியும், குற்றவாளிக்கு தண்டனையும் உறுதி செய்யும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.