இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் கோவை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு காலை 6.30 மணிக்கு, ஈரோட்டிற்கு காலை 7.17 மணிக்கு, சேலத்திற்கு காலை 8.08 மணிக்கு வந்து சேரும். சேலத்தில் இரண்டு நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.