தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை விழாதவர்களின் சிரமத்தை போக்குவதற்காக விரைவில் கண் கருவிழி ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்குவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் முதல்வரின் அனுமதி பெற்று முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கண் கருவிழி சாதனங்களுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். அதுவரை கைரேகை வேலை செய்யாதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவை தலைவர் அப்பாவு, தற்போதைய நிலவரப்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கினால் தான் பொருட்கள் தரப்படுகிறது. இந்த நிலையை மாற்றி விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ரேஷன் அலுவலர்களிடம் கொடுத்தால் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, அவை தலைவரின் கோரிக்கை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.