சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரை ஓரமாக அமர்ந்து கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவர், வெளிநாட்டுப் பெண்மணியை ஏமாற்றி நிர்வாணப் பூஜை என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 37 வயது பெண் ஒருவர் கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளச் சென்னை வந்துள்ள நிலையில், பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றுள்ளார். ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட இவர், அங்கு கிளி ஜோதிடம் பார்த்தார்.
அந்த ஜோதிடர் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகக் கூறவே, அந்தப் பெண் வியந்து போய் அவருக்கு ரூ. 20 ஆயிரத்தைக் கட்டணமாகக் கொடுத்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையைக் கண்ட ஜோதிடரின் கண் மிரண்டு, எப்படியாவது இந்தப் பெண்ணிடமிருந்து பணத்தைப் பறிக்க வேண்டும் என்ற மோசமான திட்டத்தைத் தீட்டினான்.
அந்தப் பெண்ணிடம் பேசிய ஜோதிடர், “உங்களுக்குக் கடுமையான தோஷம் உள்ளது. உடனே நிர்வாணப் பூஜை செய்தால் மட்டுமே அது நீங்கும். அதன் பிறகு உங்கள் வாழ்க்கை தலைசிறந்து விளங்கும்” என்று ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றியுள்ளார். இதை முழுமையாக நம்பிய அந்தப் பெண், உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்த அறையில் இருந்தபடியே ஜோதிடருக்கு வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்புகொண்டு பூஜை செய்துள்ளார். அப்பொழுது அவரை நிர்வாணக் கோலத்தில் இருக்கச் சொல்லிக் கூறிய அந்த வஞ்சகன், அந்தத் தருணத்தைத் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து கொண்டுள்ளான். அதுமட்டுமின்றி, இந்தப் பரிகாரப் பூஜைக்கு அவரிடம் இருந்து ரூ. 70 ஆயிரத்தையும் வாங்கியுள்ளான்.
இதற்கிடையில் கனடாவுக்குத் திரும்பிச் சென்ற அந்தப் பெண், மீண்டும் தொலைக்காட்சியின் அழைப்பின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார். தான் சென்னைக்கு வந்த தகவலை அந்த ஜோதிடரிடம் அவர் பகிர்ந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், “மீண்டும் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும்; உடனே ரூ. 1 லட்சம் பணம் தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளான்.
ஆனால், அந்தப் பெண்ணோ “இதுவரை செய்த பூஜையே போதும், எனக்கு இனி வேண்டாம்” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த அந்த ஜோதிடர், “உன்னுடைய நிர்வாணப் புகைப்படங்கள் என் போனில் உள்ளன. உடனடியாக நான் கேட்ப பணத்தைக் கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும். மீறினால் உனது நிர்வாணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவேன்” என்று கொடூரமாக மிரட்டல் விடுத்துள்ளான்.
நம்ப வைத்து ஏமாற்றிய ஜோதிடரின் சுயரூபத்தைக் கண்டு நிலைகுலைந்து போன அந்த வெளிநாட்டுப் பெண், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், தென்காசி மாவட்டத்திற்கு விரைந்து சென்று கிளி ஜோதிடரான இசக்கிமுத்து (48) என்பவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரைச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், வரும் 17ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைத்தனர். கிளி ஜோதிடம் என்ற பெயரில் அப்பாவிப் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் இத்தகைய மோசடிப் பேர்வழிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
