திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவர் இன்னிசை குழுவில் பாடுகிறவர் இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று பாடல் பாடுபவர் என்பதால் அந்தந்த ஊரில் உள்ள மக்களிடையே நெருங்கி பழகுவார்.

அப்படி இவர் தென்காசிக்கு சென்றிருந்தபோது அங்கு சந்தித்த முத்துராமலிங்கம் மற்றும் திருமலை குமார் ஆகிய இருவரிடமும் தான் ரயில்வேயில் பணியாற்றுவதாகவும் தனக்கு அதிகாரிகள் நல்ல பழக்கம் என்றும் கூறியுள்ளார். அதோடு பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி முத்துராமலிங்கம் 6.80 லட்சமும் திருமலை குமார் 5.42 லட்சமும் கொடுத்துள்ளனர். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் வேலை தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இதனால் பிச்சைக்கண்ணுவிடம் பணத்தை திருப்பித் தருமாறு இருவரும் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் முத்துராமலிங்கம் மற்றும் திருமலை குமார் இணைந்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பிச்சைக்கண்ணுவை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் இந்த மோசடிக்கு பயன்படுத்திய ஐந்து மொபைல் ஃபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.