தமிழகத்தின் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றும் லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சொன்னதுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து அவர் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து ஒவ்வொரு தலைமுறைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழ் திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தில் தியாகராஜ பாகவதர் உச்ச நட்சத்திரமாக இருந்தார். அதன் பிறகு உச்ச நட்சத்திரமாக எம்ஜிஆர் இருந்தார். எம்ஜிஆர் அரசியலுக்குள் நுழைந்த சமயத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து விட்டார்.

ஐயா ரஜினிகாந்த் அவர்களே தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். ஆனால் தற்போதுள்ள தலைமுறை விரும்பக்கூடிய நடிகராக தம்பி விஜய் தான் இருக்கிறார். இதை ரஜினி ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான எதார்த்த கருத்தை தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் பிஸ்மி அலுவலகத்திற்கு ரஜினி ரசிகர்கள் சென்று மிரட்டும் தோணியில் பேசியது கண்டிக்கத்தக்கது. இதை ஐயா ரஜினிகாந்த் கூட விரும்ப மாட்டார். ரஜினி ரசிகர்கள் இப்படி செய்வது அவருடைய பெயருக்கு தான் களங்கம் ஏற்படுத்தும். எனவே ரஜினி ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் தற்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்று விவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.