சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி சார் என்ற ஒருவரிடமும் ஞானசேகரன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்தியதாக கூறினார். ஆனால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சார் என்ற ஒருவர் கிடையாது எனவும் மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் அப்படி பேசியது போல் நாடகமாடியதாகவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று காவல்துறை கூறும் நிலையில் எதிர்க்கட்சிகள் சார் என்ற ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. அதன் பிறகு குற்றவாளி திமுகவை சேர்ந்தவன் என்பதால் இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் நாள் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். அதன் பிறகு யார் அந்த சார் என்ற பதாகைகளையும் அவர்கள் வைத்திருந்தனர். அவர்கள் யார் இந்த சார் என்று கோஷம் எழுப்பியதால் அவர்களை அவை காவலர்களிடம் சொல்லி வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்களை அவையில் இருந்து வெளியேற்றினர். மேலும் யார் அந்த சார்.? பதில் சொல் என சட்டப்பேரவையில் அதிமுகவினர் முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.