ஐபிஎல் 2025 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸுடன் விளையாடிய போட்டியில், அபிஷேக் சர்மா தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்து வரலாற்று சாதனை படைத்தார். வெறும் 40 பந்துகளில் சதத்தை முடித்த அவர், யூஸ்வேந்திர சஹால் வீசிய பந்தியில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த சாதனை IPL வரலாற்றில் 3-வது வேகமான சதமாகும். அபிஷேக் சதம் அடைத்த உடனே, ஹைதராபாத்தில் உள்ள உப்பல் ஸ்டேடியத்தில் ரசிகர்களின் முழு கூட்டமும் எழுந்து நின்று கரகோஷத்துடன் அவரை பாராட்டியது.

 

சதத்தை அடைந்த பிறகு, “This one is for the Orange Army” என எழுதப்பட்ட வெண்காகிதத்தை அபிஷேக் ரசிகர்களை நோக்கி காட்டினார். இதைக் கண்டு, பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அவரிடம் சென்று அதை பார்க்க ஆர்வம் காட்டினார். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் (14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) விளாசி, டேவிட் வார்னரின் 126 ரன்கள் சாதனையை முறியடித்து, SRH அணிக்காக IPL இல் மிக உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோர் அடித்த வீரராகவும், இந்திய வீரர்களில் IPL வரலாற்றில் மிக அதிகமான ஸ்கோர் சாதித்தவராகவும் புதிய சாதனை படைத்தார்.

 

டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அபிஷேக் சர்மா 171 ரன்கள் ஓப்பனிங் கூட்டணி அமைத்தார். டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) அடித்தார். 246 ரன்கள் என்ற பெரிய இலக்கை 8 விக்கெட் வித்தியாசத்தில், 9 பந்துகள் மீதம் இருந்தபடியே SRH வெற்றிகரமாக எட்டியது. இது IPL வரலாற்றில் இரண்டாவது பெரிய ரன்கள் சேஸாகும். தொடக்கத்தில் சிரமப்பட்டிருந்த அபிஷேக், இந்த போட்டியில் சுறுசுறுப்பான ஆட்டத்துடன் மீளாமல் தாக்கி, SRH அணிக்குத் தேவையான பிளாஸ்டிங் தொடக்கத்தை வழங்கினார். மேலும் இறுதியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது.