திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தம் தலைமையில் முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், குடவாசல், திருவாரூர், உள்ளிட்ட பத்து வட்டாரங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று வருவாய் மாவட்ட அலுவலர் சிதம்பரம் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ மற்றும் வேளாண் அதிகாரிகள் வடகால், கீழ கூத்தங்குடி, வேப்பத்தாங்குடி, பின்னவாசல், ஒடாச்சேரி போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது குறித்து பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ கூறியதாவது, மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. இந்த சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கும் படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு பயிர் பாதிப்புக்கு உண்டான நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.