
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறோம். ஆனால் விஜய் புதிதாக எதுவும் சொல்லவில்லை. திராவிட சித்தாந்தங்களை மட்டும் தான் அவர் பேசுகிறார். ஆனால் நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து பாலாஜி குறித்த கேள்விக்கு இந்திய அரசில் இரண்டு கட்சிகள் மட்டும் தான் மிகவும் வித்தியாசமான முறையில் பயணிக்கிறது. அதில் ஒன்று திமுக மற்றொன்று ஆம் ஆத்மி கட்சி என்றார். ஊழல் கட்சியாக இருக்கும் திமுக ஜெயிலிலிருந்து ஊழல் குற்றச்சாட்டில் வெளியே வந்த ஒருவரை காந்தியவாதியாக கொண்டாடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிது கிடையாது. இது எல்லாவற்றையுமே மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, ஒரு கட்சியை பொறுத்தவரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளார். முதலில் அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரான நிலையில் அடுத்ததாக அமைச்சராகி தற்போது துணை முதலமைச்சராக மாறியுள்ளார். திமுக கட்சி ஒரு குடும்பத்தை மட்டுமே சார்ந்து இயங்குகிறது என்ற குற்றச்சாட்டினை நாங்கள் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அவர்கள் திறமைகளை ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது உண்மையாகிவிட்டது. நாங்கள் துணை முதல்வராக உதயநிதி செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். எந்த இடத்தில் வரவேற்க வேண்டுமோ அந்த இடத்தில் வரவேற்போம் என்று கூறினார். மேலும் திமுக ஊழலோடும் இணைந்திருக்கும் ஒரு கட்சி என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.