கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த  மாஷா அமினி  என்ற பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியாத காரணத்திற்காக சிறப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரானில் மிகப்பெரிய வன்முறையை தூண்டியது. பெண்கள் பலர் ஹிஜாபை எரித்தும் தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 25 ஆயிரம் பேர் சிறையில் தள்ளப்பட்டனர்.

இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ஈரான் அரசு கடுமையான நிபந்தனைகளை தளர்த்தி பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தது. இதனால் அங்கு அமைதி நிலவியது. இந்நிலையில் சிறப்பு படை காவல்துறையினர் மீண்டும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளனர். அவ்வகையில் சாலையில் செல்லும் பெண்கள் ஹிஜாபை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெண்கள் ஹிஜாப் அணியாமல் வந்தால் முதலில் எச்சரிக்கப்படுவார்கள். தொடர்ந்து அதே தவறை செய்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.