மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமானது நேரடியாக தலையிட இயலாது என்று ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் குஷ்பு புகாரளித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ராணுவ வீரர் புகார் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என கூறினார். இதனிடையே மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, தாங்கள் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் துணை நிற்பதாக தெரிவித்தார். அதோடு கலாசேத்ரா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே ஆணையம் துணைநின்றதாக குஷ்பு குறிப்பிட்டார்.