மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மொபைல் போன் மற்றும் மாற்று மத தொடர்புடைய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்குள் செல்லும் முன் தீவிர சோதனைகளுக்கு பின்பு தான் பக்தர்கள் அனுப்பப்படுவார்கள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கோவிலின் உள்ளே அம்மன் சன்னதி அருகே வரிசையில் நின்றிருந்த சில பெண்கள் கையடக்க புத்தகம் ஒன்றுடன் நின்று கொண்டு மெல்லிய குரலில் பிராத்தித்து கொண்டிருந்தனர். இதனை அங்கிருந்த ஊழியர் பார்த்து சந்தேகம் அடைந்து விசாரித்த போது அவர்கள் கிறிஸ்துவர் என்பதும் கையில் வைத்திருந்தது பைபிள் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் கோவில் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதற்கு அந்த பெண்கள் பள்ளிவாசல் மற்றும் சர்ச்க்கு மாற்று மதத்தினர் செல்லும் போது கோவிலுக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அதிகாரிகள் பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என்பது பல காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. அறநிலையத்துறையின் விதிமுறைகளின் படி பின்பற்றி தான் ஆக வேண்டும் எனக் கூறினர். அதோடு அந்த பெண்களை கோவிலில் இருந்து வெளியேற்றினர்.