நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2000 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுக்களை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக புதிய 2000, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இன்று  முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். தினமும் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது,2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு வேறு ரூபாய் தாள்கள் அளிக்கப்பட்ட விவரம் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்ட விவரத்தையும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சேவை குறைபாடுஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய புகார் தாரர் மற்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த முப்பது நாட்களுக்குள் வங்கி பதில் அளிக்கவில்லை என்றால் அல்லது புகார் தாரர் பதில் அல்லது தேர்வில் திருப்தி அடையவில்லை என்றால் ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த ஓம்புட்ஸ்மேன் திட்டத்தின் (RB-IOS) கீழ் புகாரை பதிவு செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.