தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 6 பேர், புதுக்கோட்டையில் 5 பேருக்கும் டெங்கு பரவியுள்ளது.

மொத்தம் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். “மழை பெய்யும் காலம் என்பதால், தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கும், அனைத்து துறை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களும் டிரம் மற்றும் குடங்களில் பிடித்து வைக்கப்படும் நீரை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.