கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த  சில நாட்களாகவே தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.