மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 35 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்வதற்காக பெண் தேடி வந்தார். இதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் தனது புகைப்படம் மற்றும் சுய விவரங்களை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்து ஒரு இளம்பெண் வாலிபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதன் பிறகு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இளம்பெண் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய வாலிபர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம்பெண் கூறிய ஆன்லைன் தளத்தில் 39 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

ஆனால் கடைசி வரை வருமானம் கிடைக்காததால் வாலிபர் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.