வருகின்ற30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் மும்பையில் தொழிலாளர் ஆணையம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாட்களான இன்று குடியரசு தின விடுமுறை நாள் மற்றும் நாளை மறுதினம் 4-வது வார சனிக்கிழமை விடுமுறை, அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் வங்கிகள் 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இடைப்பட்ட நாளான நாளை மட்டுமே வங்கிகள் செயல்படும். இதனால் வாங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.